நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்களை அவுஸ்ரேலிய இணைய தளம் வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று பிரான்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனம் அவுஸ்ரேலிய கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
பிரான்ஸ் நாட்டின் டி.சி.என்.எஸ். கப்பல் கட்டுமான நிறுவனத்திடம் இந்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு ‘ஸ்கார்பீன்’ ரக 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இவை, இன்னும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படாத நிலையில் இந்த கப்பல்கள் பற்றிய 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் ‘தி அவுஸ்ரேலியன்’ என்னும் பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த கடற்படைக்கு ராணுவ மந்திரி பாரிக்கர் உத்தரவிட்டும் உள்ளார்.
இதற்கிடையே, இதே டி.சி.என்.எஸ். நிறுவனத்துடன் 38.13 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடி) 12 அதிநவீன அடுத்த தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளஅவுஸ்ரேலிய அரசு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவணங்கள் வெளியானதால் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.
தங்கள் நாட்டுக்காக தயாரிக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்கள் பற்றிய ரகசிய ஆவணங்கள் எதுவும் வெளியாகி விடக்கூடாது என்பதில் அவுஸ்ரேலியா மிகவும் கவனமாக இருக்கிறது. இதுகுறித்து டி.சி.என்.எஸ். நிறுவனத்துக்கு அவுஸ்ரேலிய அரசு கடும் எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறது.
இதுதொடர்பாகஅவுஸ்ரேலிய ராணுவ மந்திரி கிறிஸ்டோபர் பைனே சார்பில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகி இருப்பது எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. எங்களுடைய நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு விஷயத்தில் இதுபோல் எதுவும் நடந்து விடாமல் ஆவணங்களை பாதுகாப்பதில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்” என்று எச்சரித்தார்.
இந்த நிலையில் டி.சி.என்.எஸ். கப்பல் கட்டுமான நிறுவன வக்கீல் ஜஸ்டின் முன்சி, அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகர கோர்ட்டில் நேற்று (28) ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில், எங்களது நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பான தடை செய்யப்பட்ட தகவல்களை பரப்புவது எங்களையும், எங்களுடைய வாடிக்கையாளர்களையும் வெகுவாக பாதிக்கும். எனவே எங்கள் நிறுவனத்தின் மதிப்பு கருதி அதுபற்றிய தகவல்களை ‘தி அவுஸ்ரேலியன்’ பத்திரிகையின் இணையதளம் தொடர்ந்து வெளியிடுவதற்கு தடை விதிக்கவேண்டும். தவிர, ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஆவணங்களை அந்த இணையதளம் எங்கள் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கவும் உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.